அரச சேவையென்பது வேலைவாய்ப்பு அல்ல. அது மக்களுக்கான சேவையேயாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது

“அரச சேவையென்பது வேலைவாய்ப்பு அல்ல. அது மக்களுக்கான சேவையேயாகும். ஒவ்வொரு நாளும் சம்பள உயர்வு, பதவி உயர்வு கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய கோரிக்கைகள் அனைத்துக்கும் எம்மால் தீர்வை முன்வைக்க முடியும். அது எப்போதென்றால் அரச வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவேயாகும்.

அத்துடன் அரச வருவாயை அதிகரிப்பதைப்போன்று கழிவுகளை குறைத்தல் மற்றும் ஊழலை ஒழித்தல் ஆகியவற்றையும் பொது சேவையின் ஊடாகவே செயற்படுத்த முடியும்.

மேலும் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பொது சேவையை திறம்பட செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

எனவே சுயாதீன ஆணைக்குழுக்களில் மற்றும் அரச சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்” என்றார்.

இதேவேளை, இந்நிகழ்வில் சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.